மகரவிளக்கு' பூஜைகளுக்காக வெள்ளி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது.
ஹைலைட்ஸ்
- நேற்றிரவு 70-க்கும் மேற்பட்டோர் கைது
- பினராயி விஜயன் வீட்டுக்கு எதிரிலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது
- உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது
Sabarimala: சபரிமலைக்கு அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 70-க்கும் மேற்பட்டோரை அம்மாநில காவல் துறை கைது செய்துள்ளது.
சபரிமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர் ஐயப்ப பக்தர்கள்.
மேலும் நேற்றி இரவு, கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீட்டுக்கு எதிரிலும் பெரும் அளவிலான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக-வினர், கொச்சி, கோழிக்கோடு, மல்லபுரம், கொள்ளம், அரண்முல்லா, ஆலப்புழா, ரண்ணி, தோடப்புழா, களடி ஆகிய இடங்களில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதற்றமான சூழல் நிலவி வருவதால், பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு அருகில் தங்கக் கூடாதென்று போலீஸ் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, மூன்றாவது முறையாக கோயில் நடை வெள்ளிக் கிழமை திறக்கப்பட்டது. இந்நிலையில் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றன இந்து அமைப்புகள்.
கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்' என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இதுவரை ஐயப்பன் கோயில் 3 முறை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.
மகரவிளக்கு' பூஜைகளுக்காக வெள்ளி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களுக்கு கோயில் திறந்த நிலையில் தான் இருக்கும்.
உச்ச நீதிமன்றம், உத்தரவுக்குப் பிறகு சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சபரிமலையில் நிலவி வரும் சூழல் குறித்து மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், ‘அவசர நிலையை விட மோசமான சூழ்நிலை சபரிமலையில் இருக்கிறது. பக்தர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி அளிக்கப்படவில்லை. 144 தடை உத்தரவு தேவையில்லாமல் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒன்றும் தீவிரவாதிகள் அல்ல' என்று கருத்து தெரிவித்துள்ளார்.