திமுகவுக்கும், தினகரனின் அமமுகவுக்கும் இடையே நல்ல தொடர்பு இருப்பதாக முதல்வர் எடப்பாடிபழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
4 சட்டமன்ற இடைத்தேர்தலில் சிறப்பான முறையில் செயலாற்றி வெற்றி பெறுவோம். முன்பு நடந்த 18 தொகுதி இடைத் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
அனைத்தும் தேர்தல் விதிமுறைகளின்படி நடப்பதால் உளவுத்துறை எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. திமுகவுக்கும், தினகரனின் அமமுகவுக்கு உள்ள நெருக்கம் வெளிப்பட்டு விட்டது.
ஏனென்றால் அதிமுகவுக்கு எதிராக செயல்படும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதற்கு ஏன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொந்தளிக்கிறார் என்று தெரியவில்லை.
எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மீதுதான் நாங்கள் புகார் அளித்தோம். அப்படியிருக்கையில் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்.
இதிலிருந்து திமுகவுக்கும், அமமுகவுக்கும் இடையே நெருக்கம் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் குடிநீர் பிரச்னையில் நாங்கள் நேரடியாக தலையிட முடியாது.
தேர்தலுக்கு முன்பாகவே குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் வறட்சி வருகிறபோது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன. அதன்படி அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.