கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக இருந்த பங்களாவில், சென்ற ஆண்டு அடுத்தடுத்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் உருவானது
ஹைலைட்ஸ்
- கொடநாடு விவகாரத்தில் முதல்வர் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
- அதிமுக, முதல்வர் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது
- முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தல்
கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடரப் போவதாக மேத்யூ சாமுவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக இருந்த பங்களாவில், சென்ற ஆண்டு அடுத்தடுத்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் உருவானது. இது குறித்து சமீபத்தில் தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஒரு ஆவணப்படம் வெளியிட்டார். கொடநாடு விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சயன் மற்றும் மனோஜ் அந்த ஆவணப்படத்தில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் கொலை மற்றும் கொள்ளையில்' ஈடுபட்டோம் என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர்.
அந்த ஆவணப்படத்தில், 2,000 கோடி ரூபாய்க்கு சொத்துகள் மட்டும் பல முக்கிய ஆவணங்கள் கொடநாடு பங்களாவிலிருந்து திருடப்பட்டதாகவும், அதனைக் கைப்பற்றித்தான் அதிமுக-வை தனது கைக்குள் முதல்வர் எடப்பாடி வைத்துள்ளார் என்றும் மேத்யூ குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, மேத்யூ சாமுவேல், சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தமிழக அரசு. தொடர்ந்து இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ளார் மேத்யூ சாமுவேல். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கொடநாடு விவகாரத்தில் இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறையான பதிலை சொல்லவில்லை. அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த விவகாரத்தில் இருக்கும் உண்மையைப் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன். சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்வேன்' என்று கூறியுள்ளார்.