This Article is From Jun 05, 2018

நீட் தேர்வு முடிவுகள்: வீழ்ந்த தமிழக தேர்ச்சி சதவிகிதம்!

இதர மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் ஒரே தேர்ச்சி சதவிகிதமாக 39.55 சதவீதம் பெற்றுள்ளனர்

நீட் தேர்வு முடிவுகள்: வீழ்ந்த தமிழக தேர்ச்சி சதவிகிதம்!

ஹைலைட்ஸ்

  • இந்தாண்டு 45,336 தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி
  • 1.20 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர்
  • மாநில அளவில் கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வில் முதல் இடம்
New Delhi:

45,336 தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் இருந்து இந்தாண்டு நீட் தேர்வுக்கு 1.20 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் இருந்து 1,14,602 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். மாநில அளவில் கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வில் முதல் இடமும் இந்திய அளவில் மாணவிகள் தரவரிசையில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கீர்த்தனா.

தேசிய அளவில் 12-வது இடம் பிடித்துள்ள கீர்த்தனாவின் தேர்ச்சி விழுக்காடு 99.998976 ஆகும். தரவரிசைப் பட்டியலில் மாணவிகளுக்கு என தனி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. டாப் 20 தேர்ச்சியாளர்களில் 3 பேர் மாணவிகள். அதே போல் டாப் 50 தேர்ச்சியாளர்களில் 11 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஆக மொத்தத்தில் 2018 நீட் தேர்வை 56.26 சதவிகித மாணவ மானவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சமாக நாகாலாந்து உள்ளது. இம்மாநிலத்தில் 29.3 சதவிகித மாணவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், இதர மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் ஒரே தேர்ச்சி சதவிகிதமாக 39.55 சதவீதம் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த இந்திய தரவரிசைப் பட்டியலில் பீஹாரின் கல்பனா குமாரி முதலிடமும் தெலங்கானாவின் ரோஹன் புரோகித் இரண்டாம் இடமும் டெல்லியைச் சேர்ந்த ஹிமான்சு சர்மா மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

இந்த நீட் தேர்வுக்கு கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து மட்டும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 1,422 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும், அதில் 933 வழக்குகள் அரசியல் கட்சிகளாலும் 317 வழக்குகள் மாணவர்களாலும் தொடரப்பட்டுள்ளது  என தமிழக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு அலைகள் உச்சத்தை அடைந்தபோது அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு தமிழக மாநிலக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என 85 சதவிகிதம் இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு சுமார் 3,500 மாணவர்கள் கேரள தேர்வு மையத்துக்குச் சென்று தேர்வு எழுதினர். இந்தாண்டு தேர்வு முடிவின் போது தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.

.