This Article is From Mar 19, 2019

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம்! - திமுக தேர்தல் அறிக்கை

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கி உள்ளது.

நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம்! - திமுக தேர்தல் அறிக்கை

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் முக்கியமாக, மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும். சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை ரூ.8 ஆயிரமாக நிர்ணயிக்கப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புறங்களுக்கு 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட 43 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக திமுக வழங்கியுள்ளது.

.