எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,500 தேர்வு மையங்களில் கடுமையான கட்டுப்பாட்டுடன், கடந்த மே.5ஆம் தேதி நடைபெற்றது. இந்தமுறை நீட் தேர்வினை, 15 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
தமிழகத்தில் சுமார் 1 லட்சத்தி 34 ஆயிரம் மாணவர்கள், இந்தாண்டு நீட் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்தி 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் காலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான வினாத்தாள் எளிமையாக இருந்ததாக வல்லுநர்களும் மாணவ, மாணவிகளும தெரிவித்திருந்தனர். இதேபோல், இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து அதிகளவு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று புதழ்கிழமை (ஜூன் 5) வெளியாகவுள்ளது. தேர்வின் முடிவுகளை தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ntaneet.nic.in) www.nta.ac.in , www.ntaneet.nic.in சென்று தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகம் 34% தேர்ச்சியை மட்டுமே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.