நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான அட்மிஷன் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது.
New Delhi: மருத்துவக் கல்வி பயில்வதற்கு எழுதப்படும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கேட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு குறித்து லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், இந்த பதிலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் பேசிய அமைச்சர் போக்ரியால், “நீட் தேர்வில் இருந்து தங்களது மாநிலங்களுக்கு விலக்களிக்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கோரிக்கை வைத்தன.
ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956- பிரிவு 10டி, ஒரே நுழைவுத் தேர்வுதான் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. இந்த சட்ட விதிமுறை, நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கு பொருந்தும் என்பதால், நீட் தேர்விலிருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு கொடுக்க முடியாது” என்று கூறினார்.
லோக்சபாவில் இது குறித்த விவாதத்தின்போது, தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் புள்ளவிவரம் பற்றி தமிழக எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், தங்களிடத்தில் அது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
மத்திய அரசால், சமீபத்தில் உருவாக்கப்பட்டது தேசிய டெஸ்டிங் ஏஜென்சியான என்.டி.ஏ. தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்த இந்த அமைப்புக்கு அதிகாரம் கொடுத்துள்ளது மத்திய அரசு.
இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வை எழுத்த 15,19,375 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 14,10,755 பேர் தேர்வெழுதினர். இறுதியில் 7,97,042 பேர் மட்டுமே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான அட்மிஷன் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது.