This Article is From Aug 17, 2020

திட்டமிட்டபடி NEET, JEE தேர்வுகள் நடத்தப்படும்; கால அட்டவணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

திட்டமிட்டபடி NEET, JEE தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி NEET, JEE தேர்வுகள் நடத்தப்படும்; கால அட்டவணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மருத்துவப் படிப்பிற்காக எழுதப்படும் நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வுகள், திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தேர்வுகள் நடத்த வெளியிடப்பட்டிருந்த கால அட்டவணையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 11 மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இது குறித்தான வழக்கில் நீதிமன்றம், “மாணவர்களின் வாழ்க்கையை நிச்சயமற்றத் தன்மைக்கு உட்படுத்த முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 

இரு தேர்வுகளும் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. “வாழ்க்கை என்பது நிற்காது. அனைத்துவிதப் பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். மாணவர்கள் ஒரு முழு ஆண்டையும் வீணாக்கத் தயாராக இருக்கிறார்களா? கல்வி மீண்டும் செயல்பட வேண்டும். இன்னும் ஓராண்டுக்குக் கூட கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம். அதனால், அந்த ஓராண்டுக்கும் பொறுத்திருக்க முடியுமா? இப்போது தேர்வு அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்துவதனால் நாட்டுக்கும், மாணவர்களுக்கும் எவ்வளவு இழப்பு ஏற்படும் தெரியுமா?” என்று நீதிபதி அருண் மிஸ்ரா வழக்கு விசாரணையின் போது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. 

கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டு சாதாரண சூழல் திரும்பும்போதுதான், தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று 11 மாநிலங்களிலிருந்து 11 மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதேபோல நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான, தேர்வு எழுதும் மையங்கள் நாடு தழுவிய அளவில் உயர்த்தப்பட வேண்டும் என்று மனுவில் மாணவர்கள் கோரியிருந்தனர். 

வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா, மாணவர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடியபோது, “நீதிமன்றத்திடமிருந்து நிவாரணத்தை எதிர்பார்க்கின்றனர் மாணவர்கள்” என்றார். 

தேசிய சோதனை முகமையான என்டிஏ சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தேர்வுகள் நடத்த அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என உறுதியளித்தார். 

செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. 
 

.