கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு நீட் தேர்வு கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த ஆண்டு முதல் இந்த 2 படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான நீட் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.
இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,
சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கு கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டே இந்த படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்தது. ஆனால் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் அடங்கிய குழுவினர் விவாதித்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்படவில்லை.
ஆனால் இந்த ஆண்டு சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு முறை அமல்படுத்துமாறு மத்திய அரசிடம் இருந்து மீண்டும் சுற்றறிக்கை வந்துள்ளது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதன்படி, இந்தாண்டு நீட் தேர்வு முறைப்படியே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அவர் கூறினார்.