This Article is From Nov 06, 2019

#NEET இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் அரசு செல்ல வேண்டும்; மு.க.ஸ்டாலின்

ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது.

Advertisement
தமிழ்நாடு Edited by

நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய - மாநில அரசுகள் செல்ல வேண்டும் - மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில் இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய - மாநில அரசுகள் செல்ல வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

நீட் தேர்வு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், நேற்றைய விசாரணையின் போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல நீட் பயிற்சி மையங்களில் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் தனியார் பயிற்சி மையங்களில் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதால் ஏழை மாணவர்கள் எவ்வாறு பயில இயலும் என கேள்வி எழுப்பினார்கள். மேலும், பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில் நீட் தேர்வு பயிற்சிக்காக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதாகவும், ஆசிரியர்களுக்கு இதை விட அதிகமாக வழங்குவதாகவும், அவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு நீட் தேர்வை மட்டும் ஏன் திரும்ப பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை நவ.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, ஏழை - எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைக்கிறது என நாம் சொன்னபோதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கம் கற்பித்தது. இப்போது சென்னை உயர்நீதிமன்றமே அதனை வழிமொழிந்துள்ளனர். இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் மத்திய - மாநில அரசுகள் செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement
Advertisement