நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி.
நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக 1996-ல் பொறுப்புக்கு வந்தவர் உமா மகேஸ்வரி. சிறப்பாக செயல்பட்டதற்காக பல தரப்பில் இருந்தும் அவர் பாராட்டப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வீட்டில் பணியில் இருந்தவர் என 3 பேரை சரமாரியாக வெட்டினர். இதில் மூன்று பேருமே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்பட்ட பகையால் கொலை நடந்ததா அல்லது அரசியல் காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சொத்து பிரச்னைதான் உமா மகேஸ்வரி கொல்லப்பட்டடதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 1996 முதல் 2001 வரையில் அவர் நெல்லை மேயராக இருந்தார். உமாமகேஸ்வரியை பார்க்க அவரது மகள் வீட்டிற்கு வந்தபோதுதான் கொலைகள் நடந்திருப்பது தெரியவந்தது. சுமார் 3 மணிக்கு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.