Nellai Kannan Row: கண்ணன் செய்துப்பட்டதைத் தொடர்ந்து, “ஆபரேஷன் சக்சஸ்” என்று ட்வீட்டினார் ராஜா.
Nellai Kannan Row: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் தமிழறிஞர் நெல்லை கண்ணன். இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுதலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டே வார்த்தையில் பாஜகவையும் எச்.ராஜாவையும் சூசகமாக சீண்டியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணனின் உரை ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
அதில், நெல்லை கண்ணன் அமித்ஷா மற்றும் மோடிக்கு எதிராக உரையாற்றி இரு சமூகங்களுக்கிடையில் வன்முறையைத் தூண்டுவது போல் பேசியதாக அவர் மீது பல மாவட்டங்களில் பாஜகவினர் அளித்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினர் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். இந்த வழக்கை எதிர்த்து நெல்லை கண்ணன் தொடர்ந்த வழக்கில் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். காலையும் மாலையும் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு பிணை கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட வேண்டும் என்று ஆவேசமாக ட்விட்டர் மூலம் பிரசாரம் செய்து வந்தவர் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா. கண்ணன் செய்துப்பட்டதைத் தொடர்ந்து, “ஆபரேஷன் சக்சஸ்” என்று ட்வீட்டினார் ராஜா.
இன்று நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமான், “அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை. ஆபரேசன் பெயிலியர்!” என்று ராஜாவை சூசகமாக கேலி செய்துள்ளார்.