Nellai Kannan Issue - “சீமான், ராஜிவ் காந்தியைப் பற்றி பேசிய பின்னர் எத்தனைப் போராட்டங்களை காங்கிரஸ் செய்தது"
Nellai Kannan Issue - சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலின் போது, ராஜிவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல திருநெல்வேலியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசிய தமிழறிஞர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பற்றி அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்றது பற்றி மிக கொச்சையாக பேசிய சீமானைக் கைது செய்யாத தமிழக காவல் துறை, நெல்லை கண்ணனை மட்டும் கைது செய்தது எதனால். சீமானுக்கு ஒரு நியாயம், நெல்லை கண்ணனுக்கு ஒரு நியாயமா..?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விளக்கம் அளித்துள்ள முன்னாள் எம்பியும் தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணன், “சீமான், ராஜிவ் காந்தியைப் பற்றி பேசிய பின்னர் எத்தனைப் போராட்டங்களை காங்கிரஸ் செய்தது. எத்தனைப் போராட்டங்களை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னின்று நடத்தினார். தமிழக அரசுக்கு அவர்கள் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அதனால்தான், சீமானின் பேச்சுப் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆனால், அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி பற்றி நெல்லை கண்ணன் பேசிய உடன், நாங்கள் போராட்டத்தில் குதித்தோம். அதன் பிறகுதான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார்.
சென்னையில் நடந்த சிஏஏ ஆதரவு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, “கல்லூரிக்குள் இருந்து கற்கள் வந்தால், கல்லூரிக்கு இந்தப் பக்கத்தில் இருந்து குண்டுகள் விழும்,” என்று பேசினார். இப்படி பேசியதனால், நெல்லை கண்ணனைப் போன்றே எச்.ராஜாவும் கைது செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தமிழகக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விவகாரம் பற்றி பேசிய பொன்னார், “கற்களை எரிந்தால் போலீஸ் அமைதியாக இருக்குமா. பிறகு எதற்கு அவர்கள் கைகளில் லத்தியையும் துப்பாக்கிகளையும் கொடுத்துள்ளீர்கள்,” என்று ஆவேசப்பட்டார்.