Nellai Kannan Row - "சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயார்"
Nellai Kannan Row - பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் தமிழறிஞர் நெல்லை கண்ணன். பாஜகவின் தேசியச் செயலாளரான எச்.ராஜா, பல சமயங்களில் பல்வேறு விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாகவும், அவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து தமிழக அரசு சார்பில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக திருநெல்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், “எனக்கு மோடி மீது எந்த கோபமும் இல்லை. அவர் முட்டாள். அமித்ஷாதான் மத்திய அரசின் மூளையாக செயல்பட்டு வருகிறார். அவரை நீங்கள் முடிப்பீர்கள் என்று நினைக்கிறேன்…” என எல்லோரையும் ஒருமையிலேயே பேசினார். தொடர்ந்து அவர் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசினார். அந்தக் கூட்டத்தில் பெருந்திரளான முஸ்லிம்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர், மெரினா கடற்கரையில் தர்ணா போராட்டத்தில் குதித்தார்கள். உடனே நெல்லை கண்ணனை கைது செய்தது தமிழக காவல் துறை. தற்போது அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இப்படிபட்ட சூழலில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர், ‘பொதுக் கூட்டம் ஒன்றில் எச்.ராஜா, நீங்கள் கற்களை வீசினால் நாங்கள் குண்டுகளை வீசுவோம் எனப் பேசுகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்' எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், “நெல்லை கண்ணன், தனிப்பட்ட முறையில் பெயர்களை சொல்லி ஒரு சமூகத்தைத் தூண்டி விட்டார். ஆனால் எச்.ராஜா, அப்படி பேசியதாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயார்,” என்றார்.
பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஒருவர் பேசினால், அவர் மீது புகார் கொடுக்கத் தேவையில்லை என்றும், அரசே முன்வந்து வழக்குப் போடலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.