இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது.
New Delhi: இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்க நேபாள நாடாளுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், நாடாளுமன்றம் இந்த வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டின் வரைபடம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த வரைபடம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் நேபாளத்துடனான உறவில் விரிசலையும் ஏற்படுத்தியது. நேபாள நாட்டின் இந்த நடவடிக்கையை ஏற்கவே முடியாது என்று மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
வரைபடம் குறித்து விளக்கம் அளித்த நேபாளம்,1816-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் எல்லைகள் வகுக்கப்பட்டதாக கூறியுள்ளது. இந்தியா - நேபாளம் இடையிலான மேற்கு எல்லையை காலி ஆறு பிரிக்கிறது. இதற்கு கிழக்கே உள்ள பகுதி தனக்கு சொந்தம் என்று நேபாளம் உரிமை கொண்டாடுகிறது.
இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது.
அடுத்த கட்டமாக வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க நாடாளுமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்த நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சீனா மற்றும் இத்தாலி வைரஸை விட, இந்திய வைரஸ் அபாயகரமாக உள்ளதென்று விமர்சித்திருந்தார்.
வரைபடம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு உத்தரகாண்டையும், லிபுலேக்கையும் இணைக்கும் 80 கிலோ மீட்டர் சாலையை திறந்து விட்டது. இது, திபெத்தின் மானசரோவருக்கு செல்லும் இந்து புனித பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
இதற்கிடையே, புதிய வரைபடம் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளின் பாடப் புத்தகங்களிலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் அச்சிடப்பட்டு, அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.