நேதாஜியின் பிறந்த நாளை மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மம்தா வலியுறுத்தியுள்ளார்.
Kolkata: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை மத்திய பாஜக அரசு தேசிய தலைவராக அங்கீகரிக்கவில்லை என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பதால் மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்கத்தில் நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற்றன.
போஸின் பிறந்த நாள் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது-
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவரை ஒரு தேசிய தலைவராக மத்திய பாஜக அரசு கருதவில்லை.
அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நேதாஜி கூறினார். அனைத்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக நேதாஜி இருக்கிறார். நாட்டில் உள்ள அனைவருக்காகவும் போராடியவர் நேதாஜி.
இதன் காரணமாகத்தான் மகாத்மா காந்தி, மவுலானா அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் தேசிய தலைவர்களாக மதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு மம்தா கூறினார். நேதாஜியின் 122-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் நேதாஜியின் மியூசியத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.