இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைப்பு
- பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளதென அமைச்சர் தகவல்
- வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை
கொரோனா வைரஸால் தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொள்ள 300 வார்டுகள் மதுரை மற்றும் திருச்சியில் திறக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
'ரூ.10 கோடி அளவுக்கு ஏற்கனவே சுவாசக் கருவிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வாங்கி விட்டது. மதுரை, திருச்சி, சென்னையில் இன்னும் கூடுதலாக 300 சிகிச்சை வார்டுகள் திறக்கப்படும்.
தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட இன்னொருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
இன்னும் அறிகுறிகளுடன் 8 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.
சென்னையில் ஏற்கனவே சோதனைக்கூடம் உள்ளது. இன்னொரு சோதனைக் கூடம் தேனியில் திறக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3800-யை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.