சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உயர்கோபுர விளக்குகள் அமைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதைத்தவிர்த்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை மற்றும் சுகாதார பணிகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ரூ. 6.78 கோடியில் 8 நவீன டிராக்டர்கள் மூலம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உயர்கோபுர விளக்குகள் அமைக்கப்படும். இரவிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தி, மேலும் அழகுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.