This Article is From Jan 06, 2020

'நாட்டை வலிமைப்படுத்தும் நோக்குடன் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது' : மத்திய அரசு

கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வரும் ஏற்ற தாழ்வுகளை சரிசெய்யும் வகையில், நாட்டின் நெறிமுறை, அறத்தின் அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவை வலுவாக்கும் நோக்குடன் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வகையில் கல்விக் கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'நாட்டை வலிமைப்படுத்தும் நோக்குடன் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது' : மத்திய அரசு

நாட்டை வலிமைப்படுத்தும் நோக்குடன் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Bhubaneswar:

மத்திய அரசு புதிதாக கொண்டு வரவுள்ள கல்விக் கொள்கை, பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு நாட்டின் மதிப்பு மிக்க அறிவாற்றலால் உலகை ஈர்க்கும் வகையில், கல்வியாளர்களை வலிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வரும் ஏற்ற தாழ்வுகளை சரிசெய்யும் வகையில், நாட்டின் நெறிமுறை, அறத்தின் அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவை வலுவாக்கும் நோக்குடன் வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வகையில் கல்விக் கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த தத்துவங்களை மற்ற எந்த நாடுகளும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டது கிடையாது என்றும் பொக்ரியால் புகழாரம் சூட்டியுள்ளார். 

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பொதுத்தளத்தில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக பல பரிந்துரைகள் வந்தன. உலகிலேயே மிகப்பெரிய அளவில் இதற்காக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சர் தெரிவித்தார். 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் தனியார் பல்கலைக் கழகம் ஒன்றில் நடைபெற்ற விழாவின்போது அமைச்சர் பொக்ரியால் இவ்வாறு பேசினார். 

இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், 45 ஆயிரம் கல்லூரிகள், 16 லட்சம் பள்ளிகள், ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்கள் இருப்பதாக அமைச்சர் கூறினார். இந்தியாவில் 33 கோடி மாணவர்கள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை காட்டிலும் அதிகம் என்று புகழாரம் சூட்டினார். 

இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வழிகள் பல உள்ளன என்று குறிப்பிட்ட அமைச்சர், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்டவை இளம் தலைமுறையினருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டங்கள் நாட்டை உலகளவில் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

ஸ்கில் இந்தியா எனப்படும் திறமை இந்தியாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறிய பொக்ரியால், இதன் மூலமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு தொழிற்கல்வி அளிக்கப்படுவதாகவும், அது அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்தார். 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் சமயரா சித்ராலிபி என்ற பெயரில் 10 சிறுகதைகளை தொகுதித்துள்ளார். இந்த புத்தகம் ஒடியா மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதன் வெளியீட்டு விழாவும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.