உடுமலைப்பேட்டை பகுதியில் சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானை மாரியப்பனை திருப்பி அனுப்பியதை தொடர்ந்து கும்கி சுயம்பு யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை அருகே உள்ள கண்ணாடி புத்தூர் பகுதியில் சின்னதம்பி யானையானது தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டுள்ள நிலையில் அங்குள்ள கரும்புகளை சாப்பிட்டும், தண்ணீரில் விளையாடியும் பொழுதை கழித்து வருகிறது.
கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த சில தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சின்னதம்பியை வனத்துக்குள் விரட்ட பொள்ளாச்சியில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்த கும்கி கலீமும், மாரியப்பனும் சின்னதம்பி சுற்றித்திரியும் இடத்தின் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.
அப்போது காட்டிற்குள் இருந்து வெளியே வந்த சின்னதம்பி யானையானது இரண்டு யானைகளுக்கும் எதிரே கோபமாக நின்றது. கோபமாக இருந்த சின்னத்தம்பி யானையை பார்த்து பயந்த கும்கி மாரியப்பன் பின்வாங்கியது.
இதைத்தொடர்ந்து, கும்கி மாரியப்பன் அங்கிருந்து திரும்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின், இன்று சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி கலீமும், சுயம்புவும் சின்னத்தம்பியை காட்டிற்குள் விரட்டுமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், சின்னத்தம்பியை பார்ப்பதற்கு தினமும் சுற்றவட்டார பகுதிகளில் இருந்த அந்த பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.