கோவை, சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மனிதர்கள் வாழும் பகுதியில் உலவி வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினரும், தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் எனும் நிலை எழுந்தது. இதனை பலரும் கண்டித்தனர். இதனால் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது. எனினும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்னதம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. யானைக்கு காயம் ஏற்படாமல் பிடிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். சின்னதம்பியை வனத்துக்கு அனுப்புவதா, முகாமில் பராமரிப்பதா என பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
உத்தரவு நகலுக்காக காத்திருக்க வேண்டாம். உடனே சின்னதம்பி யானையை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லலாம். விவசாயிகள் பாதிப்பை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டிருந்தனர்.
இதனிடையே, சின்னத்தம்பியை வனத்துக்குள் விரட்ட பொள்ளாச்சியில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், மாரியப்பன் யானை சின்னத்தம்பியை கண்டு அஞ்சியது. இதைத்தொடர்ந்து, கும்கி மாரியப்பன் அங்கிருந்து திரும்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின், சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி சுயம்பு வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது, சின்னத்தம்பி யானை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, சின்னத்தம்பியை பிடிக்க ஏற்கனவே இரண்டு கும்கிகள் உள்ள நிலையில் மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : போக்கு காட்டும் சின்னத்தம்பியை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறை திட்டம்