மத்திய அரசில் மொத்தம் மோடியுடன் சேர்த்து 58 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் அதிமுகவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக மக்களவை தேர்தலை எதிர்கொண்டது. மொத்தம் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கட்சியின் முக்கிய தலைவர்களான மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச். ராஜா, நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முறையே தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோவை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டனர்.
இதில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.-ன் மகனுமான ரவீந்திரநாத் மட்டுமே அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது அதிமுகவை சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்துக்கு பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவை சேர்ந்த எவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.
அமைச்சர்கள் தேர்வு முழுவதுமே மோடி மற்றும் அமித் ஷாவின் கையில்தான் இருந்தது. அவர்கள் இருவரும் கைவிரித்து விட்டதால் தமிழகத்தை சேர்ந்த எவருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த முறை தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் தமிழகமும், கேரளாவும் பாஜகவை முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறது.