கர்நாடகாவில் மொத்தம் 224 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸ் - மஜத வசம் 118 பேர் உள்ளனர்
Bengaluru: கர்நாடகாவில் மீண்டும் அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளது. மாநிலத்தில் பாஜக சார்பில் இருக்கும் 104 எம்.எல்.ஏ-க்கள் டெல்லிக்கு விரைந்து குர்கானில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பாஜக தரப்பு, “கர்நாடக முதல்வர் குமாரசாமி, எங்கள் உறுப்பினர்களை தன் வசம் இழுக்கப் பார்க்கிறார்” என்று பரபரப்புக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், “மதச்சார்பற்ற ஜனதா தளம், எங்களின் உறுப்பினர்களின் ஒற்றுமையை உடைக்கப் பார்க்கிறது. ஆனால், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. டெல்லியில் 2 நாட்கள் தங்க உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் தரப்போ, “பாஜக-தான் ஆட்சி அரியணையில் ஏற சூழ்ச்சி செய்து வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமறைவாக இருக்கின்றனர். “எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை, பாஜக தன் வசம் வைத்துள்ளது. இதுவே பாஜக பின் வாசல் வழியாக ஆட்சியமைக்க எடுத்த நடவடிக்கையாக பார்க்க முடியும். ‘ஆபரேஷன் லோட்டஸை' அவர்கள் நடைமுறப்படுத்த உள்ளனர்” என்று காங்கிரஸ் தரப்பு பகீர் கிளப்புகிறது. 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக தரப்பு எடுத்த நடவடிக்கையை ‘ஆபரேஷன் லோட்டஸ்' என்று அழைத்தனர். தற்போதும் அதைப்போல ஒரு திட்டம் செயல்படுத்த பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க பாஜக-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ, பூர்ணிமா ஸ்ரீநிவாஸ், “மஜத மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், ஆட்சியமைக்க வேண்டும் என்பதால் இருவரும் கூட்டணி அமைத்தனர். அவர்களுக்குள் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. விரைவில் அவர்கள் பிரச்னை முற்றி, ஆட்சி தானாக கவிழும்” என்று ஆருடம் சொல்கிறார்.
கர்நாடகாவில் மொத்தம் 224 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸ் - மஜத வசம் 118 பேர் உள்ளனர். பாஜக-விடம் 104 பேர் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேர் போதும். எனவே தற்சமயம் காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது.
கர்நாடக அரசியல் குறித்து ஏகப்பட்ட பரபர தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும்போதும் முதல்வர் குமாரசாமி, “தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன் தொடர்பில்தான் உள்ளனர். அவர்கள் அனைவரும் என்னிடம் தகவல் தெரிவித்துவிட்டுத்தான் மும்பைக்குச் சென்றனர். என் தலைமையிலான அரசாங்கத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.