This Article is From Jul 09, 2018

தமிழக தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்த வருகிறது புதிய சட்டம்!

தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தை மாநில அரசு அமல் செய்ய உள்ளது

தமிழக தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்த வருகிறது புதிய சட்டம்!
Chennai:

தமிழகத்தில் இருக்கும் தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தை மாநில அரசு அமல் செய்ய உள்ளது.

இந்த சட்ட வரைவில், ‘தரமான கல்வி, முறையான கட்டணம் வசூலித்தல் மற்றும் சரியான முறையில் தேர்வுகளை நடத்துவது ஆகியவை இந்த புதிய சட்டம் மூலம் முறைபடுத்தப்படும். குறிப்பாக, ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை பொதுத் தேர்வுகளில் இருந்து ஒதுக்குவது என்பது கூடாது. மாணவர்களுக்கு அனைத்து விதங்களிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். உளவியல் ரீதியிலோ, உடல் ரீதியிலோ, பாலியல் ரீதியிலோ மாணவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது. குறிப்பிடப்பட்ட சட்ட நடைமுறைகள் மீறப்பட்டால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்ச ரூபாய் அபராதமோ விதிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் தேதி இந்தச் சட்டத்துக்கான மசோதா தமிழக சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சீக்கிரமே இது அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இந்த சட்டம் அமல் செய்தது குறித்து கல்வியாளர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பிரபல செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘இந்த சட்டத்தை வரவேற்கிறேன். ஆனால், இது ஒழுங்காக செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த அரசு இயந்திரம் சரியாக செயல்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார் தெரிவிக்கும் அலுவலகம் வெளிப்படைத்தன்மையோடு இயங்க வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் இருக்கும் ஆரோக்கியமற்ற ‘மதிப்பெண் போட்டி’ முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

‘இந்த சட்டத்தை நாங்களும் வரவேற்கிறோம். புதிய பள்ளி தொடங்குபவர்களுக்கு இந்த சட்டம் உறுதுணையாக இருக்கும். அதேபோல போலி பள்ளிகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு இச்சட்டம் உதவியாக இருக்கும்’ என்று கூறுகிறார் தமிழக தனியார் பள்ளிகளின் சம்மேளனத் தலைவர் ஆர்.விசாலாட்சி.

இந்தச் சட்டம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும், சுயநிதி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

.