நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கான படப்பிடிப்புகள் முடிவு பெற்ற நிலையில், வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொடர் படப்பிடிப்புகளில் இருந்த ரஜினி சில நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்தார். இதற்காக தனது குடும்பத்தினருடன் ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு 10 நாட்கள் ஓய்வில் இருக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் திரும்ப இருக்கிறார்.
இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
2019 புத்தாண்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். பேட்ட படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை கண்டிப்பாக படம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனது பெயரில் தொலைக்காட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வந்தது. அதனால், எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம் என்றார்.
மேலும், அவரிடம் உங்களது கூட்டணி எப்படி இருக்கும்? கமல்ஹாசன் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். அப்படி இருக்கும் போது, நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் நேரில் செல்லவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது..
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்த பின்னர் பார்க்கலாம் என்று கூறிவிட்டு வேகமாக புறப்பட்டார்.