“மிக அற்புதமான 2020 உங்களுக்கு அமையட்டும்," PM Modi
ஹைலைட்ஸ்
- 'இந்த ஆண்டு ஆனந்தத்துடனும் வளர்சியடையனும் இருக்கட்டும்'
- 2வது முறையாக பிரதமரான பின்னர், மோடி கொண்டாடும் முதல் புத்தாண்டு இது
- 'எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருப்போம்'
New Delhi: 2020 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார். 2வது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பொறுப்பு ஏற்ற பின்னர், பிரதமர் மோடி கொண்டாடும் முதல் புத்தாண்டு இது.
“மிக அற்புதமான 2020 உங்களுக்கு அமையட்டும்! இந்த ஆண்டு ஆனந்தத்துடனும் வளர்சியடையனும் இருக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருப்போம். எல்லோரின் கனவுகளும் நனவாகட்டும்,” என்று ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி.
நேற்றைய தினம், 2019 ஆம் ஆண்டு இந்தியா சாதித்தது என்ன என்பது குறித்தான ஒரு மான்டாஜை பகிர்ந்திருந்தார் மோடி.
“2019-ல் நாம் சாதித்தவற்றின் தொகுப்பு இது. 2020 ஆம் ஆண்டிலும் இது தொடரும் என நம்புகிறேன். தொடர்ந்து 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கை சிறப்புறச் செய்ய பாடுபடுவோம்,” என்று மான்டாஜுடன் பதிவிட்டிருந்தார் மோடி.
காஷ்மீரில் சுமார் 5 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.எம்.எஸ் சேவையை புத்தாண்டு முதல் மீண்டும் கொடுத்துள்ளது மத்திய அரசு. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்கும் வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கப்பட்டன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக போராட, நேற்றிரவு தெற்கு டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் பலர் கூடியிருந்தனர். புத்தாண்டு தொடங்கிய நேரத்தில் போராட்டக்காரர்கள், தேசிய கீதம் பாடி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ மூலம், மத ஒடுக்குமுறைக்கு ஆளான 3 அண்டை நாட்டவருக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ்.
அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள்.