தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ஒவ்வொரு புத்தாண்டையும் நள்ளிரவில் ஆட்டம், பாட்டம் என கோலகாலமாக கொண்டாடி வரவேற்பது வழக்கம். அந்த வகையில் இந்த புத்தாண்டை வரவேற்கவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நள்ளிரவு 12 மணிக்கு மெரினா, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரையில் கூட்டம் அலைமோதும். மேலும் சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதி மற்றும் பண்ணை வீடுகளில் சிறப்பு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.
இப்படி நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதியில் 3 ஆயிரத்து 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் போன்ற கடற்கரையில் கொண்டாட்டம் என்ற பெயரில் யாரேனும் இளம் பெண்களை கேலி செய்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 500 போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பைக் ரேஸ், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் வகையில் இன்று இரவு 9 மணி முதல் மறுநாள் காலை வரை சென்னை முழுவதும் 368 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், பாஸ்போர்ட், விசாவிற்கு போலீஸ் சான்றிதழ் வழங்கப்படாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், கடற்கரை பகுதியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்து சிசிடிவி கேமரா பதிவுகள் கண்காணிக்கப்படுகிறது.