ரமிலா உமாசங்கர் பெங்களூர் துணை மேயராக கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்
Bengaluru: கடந்த வியாழன் இரவு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களுருவின் துணை மேயரும், ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவருமான ரமிலா உமாசங்கர், (44) மாரடைப்பால் உயிரிழந்தார்.
தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த ரமிலா நள்ளிரவு 12.45 மணி அளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் துணை மேயராக பதவி ஏற்று ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துணை மேயர் ரமிலா உமாசங்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பெங்களூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மறைந்த துணை மேயர் ரமிலா மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ரமிலாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவருடைய இழப்பை தாங்கி கொள்ளும் மனதைரியத்தை அவருடைய குடும்பத்தார் பெற இறைவனிடம் வேண்டுகிறேன் என தெரிவித்தார்.
மேலும், ரமிலா உமாசங்கர் குறித்து அவர் பேசுகையில், அவர் அர்ப்பணிப்பு மிகுந்த ஒரு சமூக ஆர்வலர் மற்றும் கட்சிக்காக அயராது உழைக்க கூடியவர். அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த செய்தி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என கூறினார்.
ரமிலா உமாசங்கர் மெட்ரோ ரயில் துவக்க விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்ட பலரும், மெட்ரோ ரயிலை நேற்று துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இன்று நம்முடன் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது என பதிவிட்டுள்ளனர்.