ஜூன் 30-ம் தேதி வரை நாட்டில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
New Delhi: நாட்டில் பொது முடக்கம் 5-வது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு இரவு ஊரடங்கு நேரத்தை 4-மணி நேரம் குறைத்துள்ளது.
பொது முடக்கம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டபோது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைமுறையில் இருந்தது. புதிய கட்டுப்பாடுகளின்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையாக இரவு ஊரடங்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8-ம்தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு சுகாதாரத்துறை வகுத்துள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். இருப்பினும் நோய் தடுப்பு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்.
பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, நிலைமையைப் பொறுத்து திறந்து கொள்ளலாம். இதுதொடர்பாக கல்வி நிலைய நிர்வாகிகள், பெற்றோருடன் ஆலோசனை நடத்தும்படி மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஜூலையில் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரயில், சினிமா திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவைகள் கொரோனா பாதிப்பு நிலைமையை பொறுத்து மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 265 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,73,763 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் கொரோனா பாதிப்புக்கு 4,971 பேர் உயிரிழந்துள்னர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.