திருமண நிகழ்ச்சியில் யாரும் மாஸ்க் அணியவில்லை.
ஹைலைட்ஸ்
- பெங்களூருவில் கர்நாடக முன்னாள் முதல்வர் மகனுக்கு திருமணம் நடந்தது
- திருமணத்தின்போது சமூக விலகல் விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு
- திருமணத்தில் பங்கேற்றவர்கள் யாரும் மாஸ்க் அணியவில்லை
Bengaluru: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் பெங்களூரு அருகே பண்ணை வீட்டில் நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் நிலையில், முன்னாள் முதல்வரின் மகன் திருமணத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அங்கு சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யாரும் மாஸ்க் அணியவில்லை என்பத குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநகராவில் குமாராசாமியின் பண்ணை வீட்டில் அவரது மகன் நிகிலுக்கு திருமணம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான கிருஷ்ணப்பாவின் மகள் ரேவதியை, நிகில் மணமுடித்தார்.
குமாரசாமி வீட்டு திருமணத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மொத்தமே 60-70 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்று குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அனால் 42 வாகனங்கள் மற்றும் 120 பேருக்கு திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு அளிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரே சமூக விலகலை கடைபிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், விஐபிக்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பொங்கியுள்ளனர்.
மணமகனான அகில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அவர் மக்களவை உறுப்பினர் தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
''கட்டுப்பாடுகள் காரணமாக எல்லோரையும் அழைக்க முடியாததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் பிரமாண்ட வரேவற்பு வைக்கிறேன்'' என்று குமாரசாமி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தை ஆளும் பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்வர் அஷ்வத் நாராயணன், குமாரசாமி வீட்டுத் திருமணத்தில் விதி மீறல்கள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 315 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.