This Article is From Oct 09, 2018

அமெரிக்காவின் ஐ.நா. தூதர் பொறுப்பில் இருந்து நிக் ஹாலே ராஜினாமா

நிக் ஹாலே அளித்துள்ள ராஜினாமா கடிதத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார் என அமெரிக்காவை சேர்ந்த ஆக்ஸியஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாலே ராஜினாமா குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிகவும் நம்பிக்கைக்குரியவராக நிக் ஹாலே இருந்து வந்தார். அவருக்கு அமெரிக்காவின் ஐ.நா. சபை தூதர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அவர் தனது ராஜினாமா கடிதத்தை ட்ரம்பிடம் அளித்துள்ளதாகவும், அதனை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டதாகவும், அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்ஸியஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

ராஜினாமா குறித்து ஹாலே கடந்த வாரம் ட்ரம்புடன் ஆலோசனை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக ஆக்ஸியஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ட்ரம்ப், “எனது தோழியும், தூதருமான நிக்கி ஹாலே குறித்து ஒரு மிகப்பெரும் அறிவிப்பு விரைவில் வரும்” என்று கூறியுள்ளார். வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், ட்ரம்பும், ஹாலேவும் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

.