வௌவால் கடித்த பழங்களை உண்பதால் நிபா வைரஸ் பரவுகிறது.
Chennai: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நிபா வைரஸ் வெளவால்களிடம் இருந்து பரவுகிறது. வௌவால் கடித்த பழங்களை சாப்பிடும் நபரிடன் உடல் நிபா வைரஸ் பரவுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வைரசுக்கு கேரள மாநிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி அங்கு தீவிர முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன் மூலம் நிபா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி, தேனி,நெல்லை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக சுகாதரத்துறையின் கூடுதல் இயக்குனர் வடிவேலன் கூறுகையில், 'தமிழகத்தை பொறுத்தளவில் நிபா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோதனை சாவடிகளில் மருத்துவ குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ குழுவில் உள்ளவர்கள் நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் யாருக்கேனும் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்கின்றனர். பறவைகள் கடித்த பழங்களை யாரும் உண்ண வேண்டாம். பழங்களை நன்றாக கழுவி உண்ணவேண்டும்' என்றார்.