This Article is From Jun 05, 2018

நிபா வைரஸ் எதிரொலி: சட்டபைக்கு மாஸ்க், கையுரைகளுடன் வந்த கேரள எம்.எல்.ஏ!

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸின் தாக்கம் இன்னும் இருக்கிறது. இதுவரை நிபா வைரஸ் தாக்கி 16 பேர் இறந்துள்ளனர்

நிபா வைரஸ் எதிரொலி: சட்டபைக்கு மாஸ்க், கையுரைகளுடன் வந்த கேரள எம்.எல்.ஏ!

மாஸ்க் மற்றும் கையுரைகளுடன் சட்டமன்றத்தில் அப்துல்லா எம்.எல்.ஏ

ஹைலைட்ஸ்

  • நிபா வைரஸால் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்
  • கோழிக்கோடு மாவட்டதில் தான் நிபா வைரஸ் தாக்கம் இருக்கிறது
  • பலர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர்
Thiruvananthapuram:

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸின் தாக்கம் இன்னும் இருக்கிறது. இதுவரை நிபா வைரஸ் தாக்கி 16 பேர் இறந்துள்ளனர். பலர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். 

இந்நிலையில் கேரள எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வான பரக்கல் அப்துல்லா, இன்று சட்டமன்றத்துக்கு மாஸ்க் மற்றும் கையுரைகளுடன் வந்திருந்தார். அவர் கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் குட்டியாடி தொகுதியின் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர், `கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் எவ்வளவு உள்ளது என்பதை குறிக்கவே மாஸ்க் மற்றும் கையுரைகளுடன் வந்திருக்கிறேன். என் தொகுதியில் இருக்கும் பலர் இப்படித் தான் பாதுகாப்பு உடையணிந்து வெளியே வருகின்றனர்' என்று கூறினார்.

ஆனால், அவரின் இந்த வித்தியாசமான முன்னெடுப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பினராயி விஜயன், `எம்.எல்.ஏ தன்னையே ஒரு கோமாளியாக இந்த நடவடிக்கையின் மூலம் காட்டிக் கொண்டுள்ளார். நிபா வைரஸ் பரவியதை அடுத்து, கேரள அரசு எவ்வளவும் தீவிரமாக வேலை செய்து, அது மேலும் பரவாமல் தடுத்தது என்பதை உலகமே பார்த்து பாராட்டியது. நிபா வைரஸின் தாக்கம் பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, இது குறித்து யாரும் பதற்றப்பட வேண்டாம். அனைத்தும் அரசின் கட்டுக்குள் தான் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். 

சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, `மாஸ்க் மற்றும் கையுரைகள் இரண்டு நிலையில் தான் அணிய வேண்டும். ஒன்று நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் பக்கத்தில் இருந்தால், இல்லையென்றால் நிபா வைரஸ் இருந்தால். சட்டமன்றத்தில் வரும் யாருக்கும் நிபா வைரஸ் தாக்கம் இல்லை என்பதால், அவரின் பாதுகாப்பு உடைகளுக்கு எந்த அவசியமும் இல்லை. ஒரு வேளை அவருக்கு நிபா வைரஸ் இருக்குமாயின், உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து தேவையில்லமல் இப்படி விளம்பரம் தேடிக் கொள்ளக் கூடாது' என்று அப்துல்லாவின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார். 

 

.