ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது புகார் உள்ளது.
London: கடன் மோசடி வழக்கில் கைதாகியிருக்கும் தொழிலதிபர் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்குவதற்கு லண்டன் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கடந்த மார்ச் 20-ம்தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக நீரவ் மோடி ஜாமீன் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் நீரவ் மோடி தான் எந்தவொரு குற்றச்செயலிலும் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பாக கடந்த 2018 ஜனவரியில் இங்கிலாந்து வந்து விட்டதாகவும், இதனால் தன்னை இந்தியா கொண்டு செல்வதற்கு அனுமதிக்க கூடாது என்றும் கூறியிருந்தார். மேலும் இங்கிலாந்தில் தான் சட்டப்பூர்வமாக நடப்பதாகவும், அரசுக்கு வரி செலுத்துவதாகவும் கூறினார்.
இருப்பினும் இதனை ஏற்க மறுத்த நீதிபதி நீரவ் மோடிக்கு ஜாமீன் அளிக்க மறுத்தார். முன்னதாக வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு 3 முறை மனு அளித்திருந்தார். அவை எற்கப்படாததை தொடர்ந்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டார் நீரவ் மோடி.