New Delhi: பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் இந்திய தொழிலதிபர் நிரவ் மோடி, இங்கிலாந்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இதையடுத்து, அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,500 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நிரவ் மோடியை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் தேடப்பட்டு வருகிறார். 2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்து நிரவ் மோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளார். அவர் மோசடியில் ஈடுபட்ட விஷயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் தெரியவந்தது. அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் கொடுத்தது பிஎன்பி. ஆனால், அவரை கைது செய்து விசாரிப்பதற்கு முன்னரே குடும்பத்தோடு இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டார். அவர் இங்கிலாந்தில் தான் தலைமறைவாக இருக்கிறார் என்று இந்திய அரசு, தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர, அரசு தரப்பு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் தான் மத்திய அரசு, சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில், ‘நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வர இங்கிலாந்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது. இது குறித்து அமைச்சர் வி.கே.சிங், லண்டனில் இருக்கும் இந்திய தூதரகம் மூலம் சிறப்பு பிரிவின் கீழ் நிரவ் மோடியை நம் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சார்பில், இங்கிலாந்திடம் 29வதாக கேட்கப்படும் நபர் நிரவ் மோடி. இதுவரை இந்தியாவின் கோரிக்கையை 9 முறை நிராகரித்துள்ளது இங்கிலாந்து.
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு சார்பில் இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்தான வழக்கு இங்கிலாந்தில் நடந்து வருகிறது.