பஞ்சாப் தேசிய வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி தேடப்பட்டு வருகிறார்.
New Delhi: பஞ்சாப் தேசிய வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோடி, இங்கிலாந்தில்தான் இருக்கிறார் என்று பிரிட்டிஷ் ஏஜென்ஸி தகவல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் வி.கே. சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
பிரபல வைர வியாபாரியாக இருக்கும் நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கியில் அதிகாரிகள் துணையுடன் ரூ. 11,400 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் நீரவ் மோடி இங்கிலாந்தில் பதுங்கி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வி.கே. சிங் கூறுகையில், ''நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதாக பிரிட்டிஷ் உளவு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தகவல் அளித்துள்ளன. அவரை இந்தியா கொண்டுவருவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தின்போது ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி நீரவ் மோடி எங்கு இருக்கிறார் என்பது குறித்த விவரங்களை அளிக்குமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.