லண்டன் வீதியில் நீரவ் மோடி நடந்து சென்ற காட்சிகளை டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
New Delhi: நீரவ் மோடி விவகாரத்தில் இங்கிலாந்தின் பதிலுக்கு காத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது புகார் உள்ளது. அவர் லண்டன் வீதியில் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சிகளை டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அவரை இந்தியா கொண்டுவருவது குறித்து இங்கிலாந்தின் பதிலுக்கு காத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு மோசடி செய்ததாக, நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது புகார் உள்ளது. இந்த கடனை பெற்றுவிட்டு வெளிநாடுகளில் சொத்து வாங்கியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
அவர்களில் நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் செய்தி நிறுவனமான தி டெலிகிராஃப் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரூ. 75 கோடி அபார்ட்மென்ட்டில் நீரவ் மோடி லண்டனில் வசித்து வருகிறார்.
அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நீரவ் மோடி வீடியோ வெளியான நிலையில், இங்கிலாந்தின் பதிலுக்கு காத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
கடந்த 2018 ஜூலையில் இந்தியா கொண்டு வருவதற்கு இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்தோம். நீரவ் மோடியை நாடு கடத்துவது குறித்த ஆவணங்கள் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் விவகாரத்தில் மத்திய அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ''மோடி நினைத்ல் முடியாததும் முடியும். அனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய பணம் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாட்டுக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மீட்க முடியவில்லை.'' என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பாஜக, மோசடி நடந்தது பெரும்பாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் என்று கூறியுள்ளது.