This Article is From Jun 10, 2020

நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ தங்கம், வைர நகைகள் மீட்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி வரையில் கடன் பெற்று மோசடி செய்ததாக நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீது புகார் உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ தங்கம், வைர நகைகள் மீட்பு!

மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 1,350 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • நிரவ் மோடி, மெகுல் சோக்சி மீது ரூ. 11 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி புகார்
  • ஹாங்காங்கில் இருந்து 2,340 கிலோ தங்க, வைர நகைகள் மீட்பு
  • மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 1,350 கோடி என தகவல்
New Delhi:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று மோசடி செய்ததாக நகை வியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்சி மீது புகார்கள் உள்ளன. இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான 2,300 கிலோ எடைகொண்ட தங்கம் மற்றும் வைர நகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன.

2018-ல் நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் இந்த நகைகளை ஹாங்காங்கில் இருந்து துபாய்க்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், இறுதிக் கட்டத்தில் அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்தது.

மொத்தம் 108 பெரிய பார்சல்களில் 2,340 கிலோ நகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 1,350 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஹாங்காங்கில்தான் இந்த நகைகள் இருக்கின்றன என்ற ரகசிய தகவல் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

மீட்கப்பட்ட 108 பெரி பார்சல்களில் 32 நிரவ் மோடிக்கும், 76 மெகுல் சோக்சிக்கும் சொந்தமானது என்று அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த 2,340 கிலோ நகைகள் மும்பையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி வரையில் கடன் பெற்று மோசடி செய்ததாக நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீது புகார் உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிரவ் மோடி கடந்த ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

அவரிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறும் விதமாக நிரவ் மோடிக்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், அவரது மற்ற சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் கார், எம்.எஃப். உசேனின் ஓவியங்கள் மற்றும் பல ஆடம்பர பொருட்களும் இவற்றில் அடங்கும்.

மெகுல் சோக்சி தற்போது ஆண்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் இந்திய குடியுரிமையை ரத்து செய்திருக்கிறார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது.

.