தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி லண்டன் சாலையில் நடந்து சென்றபோது காணப்பட்டார்.
New Delhi: தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டன் நகரில் இருப்பதாகவும் அங்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை நேரில் பார்த்த பிரிட்டனில் உள்ள தி டெலிகிராப் நாளிழிதழ் நிருபர் அவரிடம் கேள்விகள் எழுப்பியபோது அவர் பதிலளிக்காமல் சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்றை டெலிகிராப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், நிரவ் மோடியிடம் அந்த நிருபர் தொடர்ந்து கேள்விகள் எழுப்புகிறார். எவ்வளவு நாள் லண்டனில் இருக்க திட்டமிட்டுள்ளீர்கள் போன்ற கேள்விகளை 6 முறையாவது அவர் கேட்டிருப்பார். எனினும் எதற்கும் அவர் பதிலளிக்காமல் அமைதியாக சென்றுவிட்டார்.
முன்னெப்போதும் இல்லாததை விட, உடல் எடை அதிகரித்து அவரது தோற்றத்தில் மாற்றம் உள்ளதால் பார்த்த உடனடியாக அவர் தான் என்பதை கண்டறிய முடியவில்லை. பிங்க் நிற சட்டையும் அதற்கு விலை உயர்ந்த மேல் கருப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்து லண்டன் சாலையில் சுறுசுறுப்பாக நடந்து சென்ற நிரவ் மோடியை கண்ட நிருபர் உடனடியாக அவரிடம் கேள்விகளை அடுக்குகிறார். அனைத்துக்கும் நோ கமெண்ட்ஸ் என்று மட்டுமே பதில் கூறுகிறார்.
மேலும், அந்த வீடியோவில், நிரவ் மோடி 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பிலான சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவதாகவும் அந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என கூறப்பட்டுள்ளது.
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிரவ் மோடி லண்டனில் இருப்பது வீடியோ ஆதாரத்துடன் உறுதியாகியுள்ளது. மேலும், அங்கு அவர் புதிய வைர வியாபாரம் ஒன்றை துவங்கி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.