This Article is From Jan 17, 2020

‘எனது மகளின் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்’ – நிர்பயாவின் தாயார் குற்றச்சாட்டு!!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது போல் சூழல்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார்.

நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் விவகாரம் தொடர்பாக கருத்து கூறியுள்ளார்.

New Delhi:

தனது மகளின் மரணத்தில் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிப்பதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது போல் சூழல்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘எனது மகளை தாக்கியவர்களுக்கு பல முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எங்களுக்கு எந்த வித உரிமையும், வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. நான் இதுவரை அரசியல் பேசியது கிடையாது. ஆனால் 2012-ல் எனது மகளுக்காக போராடியவர்கள் இன்றைக்கு எனது மகளின் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர்.' என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற கால தாமதம் ஆகிவரும் நிலையில், அதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியும், மாநில அரசுதான் காரணம் என்று பாஜகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், 2017-க்கு பின்னர் உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளின் மேல்முறையீடை நிராகரித்தது. அப்போது, டெல்லி ஆம் ஆத்மி அரசு உடனடியாக செயல்பட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தால், இன்றைக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டிருப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மனிஷ் சிசோடியா, மத்திய அரசு டெல்லி அரசுக்கு சட்டம் ஒழுங்கை காக்கும் அதிகாரத்தை 2 நாட்களுக்கு மட்டும் அளித்திருந்தால் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று கூறினார்.

ஜவடேகர் அளித்த பேட்டியில், ‘குற்றவாளிகள் இன்னும் தூக்கில் போடப்படாமல் இருந்தால் அதற்கு ஆம் ஆத்மி அரசின் கவனக்குறைவுதான் காரணம. இரண்டரை ஆண்டுகள் கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு டெல்லி ஆம் ஆத்மி அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். குற்றவாளிகள் மீது ஆம் ஆத்மி அரசுக்கு அனுதாபம் உள்ளது. அதனால்தான் தண்டனையை தாமதப்படுத்துகிறது' என்று தெரிவித்தார்.

இதற்கு மனிஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவர் சஞ்சய் சிங்கும் பதில் கொடுத்துள்ளனர்.

சிசோடியா கூறுகையில், ‘ஜவடேகர் அவர்களே, டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள்தான் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பு. உள்துறை அமைச்சகம் உங்கள் பொறுப்பில் உள்ளது. டெல்லி திகார் சிறை நிர்வாகம் உங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படியிருக்கையில் நாங்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்கிறீர்கள். பதற்றம் நிறைந்த இதுபோன்ற விவகாரங்கள் பொறுப்பில்லாமல் பேச வேண்டாம்' என்று கூறினார்.

.