சீராய்வு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதிலிருந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விலகியுள்ளார்.
New Delhi: நிர்பயா வழக்கில் குற்றவாளி தொடர்ந்துள்ள சீராய்வு மனுவை விசாரிப்பதிலிருந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விலகியுள்ளார். இந்த வழக்கில் நிர்பயாவின் குடும்பத்தினர் சார்பாக வழக்கில் வாதாடியதை சுட்டிக்காட்டி, அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். சீராய்வு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
நிர்பயா வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உறுதி செய்து அவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது. அவர்களில் ஒருவரான அக்சய் சிங் என்பவர், தனது மரண தண்டனையை எதிர்த்து சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் டெல்லியில் காற்று மாசு, நீர் மாசுபாடு காரணமாக மக்களின் வாழ்நாள் குறைந்து விட்டது. அப்படியிருக்கையில் எதற்காக மரண தண்டனை மூலம் தனது உயிரை மாய்க்க வேண்டும் என்று அக்சய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மனுவுக்கு நிர்பயாவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இந்த வழக்கில் குற்றவாளிகள் முகேஷ், 30, பவன் குப்தா, 23, வினய் சர்மா, 24 ஆகியோரது சீராய்வு மனுவை கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மருத்துவ மாணவியான 23 வயது நிர்பயா கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். டெல்லியில் நடந்த இந்த சம்பவத்தின்போது நிர்பயா கடுமையாக தாக்கப்பட்டு பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றின உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 5 பேரில் ஒருவர் சிறுவன் ஆவார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சிறார் குற்றம் செய்தால் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை சட்டங்களிலும் மாற்றத்தை கொண்டு வந்தது.