பிப்.1ம் தேதி தூக்கிலிட தடைக்கோரி மனுத்தாக்கல்
New Delhi: பிப்.1ம் தேதி தூக்கிலிட தடைக்கோரி நிர்பயா குற்றவாளிகள் 4 பேரில் ஒருவர் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து, அவர்களின் தூக்கு தேதியை தள்ளிப்போடும் வகையில் குற்றவாளிகள் அடுத்தடுத்து, எதேனும் மனுக்களை தாக்கல் செய்து வரும் நிலையில், தற்போது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூக்கிலடப்படுவதற்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் சிங் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் தூக்கிலிட தடைக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து, இந்த மனுவை இன்று விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி அக்ஷய் சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு இன்று விசாரிக்கப்பட உள்ளது.
இதனிடையே, நேற்றிரவு மற்றொரு குற்றவாளியான வினய் சர்மா குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியுள்ளார். அதில், எனது கதையை யாரும் கேட்காத நிலையில், உங்களது நல்ல மனது எனது கதையைக் கேட்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த கருணை மனுவை சமர்பிக்கிறேன்.
டிசம்பர் 2012ல் அந்த துரதிர்ஷ்டமான நாளின் மோசமான சூழ்நிலைகள் என் வாழ்க்கையை எப்படி மாற்றியமைத்து என்பதை நான் சொல்ல வேண்டிய கடைசி வாய்ப்பு இதுதான்.. இதன்மூலம் நான் விரும்பும் ஒரே தண்டனை மரணம் தானா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனுவின் மூலம் வரும் சனிக்கிழமை காலை குற்றவாளிகள் தூக்கிலடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அக்ஷய் குமாரின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தாலும், அவர் குடியரசுத்தலைவரிடம் கருணை கோரும் வாய்ப்புகள் உள்ளன.
முறைப்படி குற்றவாளிகள் 4 பேரும் ஜனவரி 22-ம்தேதி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளி முகேஷ் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவது பிப்ரவரி 1-ம்தேதிக்கு மாற்றப்பட்டது.
நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.