This Article is From Mar 04, 2020

நிர்பயா வழக்கு: பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு! விரைவில் தூக்கு?

குற்றவாளிகள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களைத் தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போய் இருக்கிறது.

நிர்பயா வழக்கு: பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு! விரைவில் தூக்கு?

Nirbhaya case: பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • திங்கட்கிழமையன்று பவன்குப்தா கருணை மனு தாக்கல் செய்தார்
  • இதனால், மார்ச்.3ம் தேதி தூக்கு ரத்தானது.
  • பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
New Delhi:

நிர்பயா குற்றவாளி பவன் குப்தா கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 23 வயதான நிர்பயா என்ற பெண்ணை, ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பவண் குப்தா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அரசு தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது.  

ஆனால், குற்றவாளிகள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களைத் தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போய் இருக்கிறது. 

இதனிடையே, குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 27-ந்தேதி மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தவறானது என்றும் தன்னுடைய கருணை மனு தவறான அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதேபோல மற்றொரு குற்றவாளியாக அக்ஷய் குமார் சிங், தூக்குத் தண்டனைக்குத் தடைவிதிக்கவேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி தர்மேந்திர ரானா அமர்வில் விசாரணை வந்தது. முதலில் அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை தர்மேந்திர ரானா தள்ளுபடி செய்தார். 

இதற்கிடையில், பவன் குப்தா, குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுத் தாக்கல் செய்தார். அதனையடுத்து, இந்த மனு தொடர்பாக உத்தரவிட்ட தர்மேந்திர ரானா, ‘குடியரசுத் தலைவரிடம் கருணை மனு நிலுவையில் இருக்கும்போது அதுதொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என்று கூறி மனுவை ஒத்திவைத்தார். 

இந்நிலையில், பவன் குப்தாவின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்துள்ளார். இதன் மூலமாக நான்கு குற்றவாளிகளின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் மார்ச் 3ம் தேதி தூக்கிலிட விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது. நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

.