குற்றவாளி வினய் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
New Delhi: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து 4 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத்தலைவர் நிராகரித்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிறையில் தான் அனுபவித்த சித்திரவதை காரணமாக ஏற்பட்ட ”மன உளைச்சலை” குடியரசுத்தலைவர் கருத்தில் கொள்ளவில்லை என மரண தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தார். எனினும், குற்றவாளி நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் உள்ளார். இதனால், மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் டெல்லி அரசும் முறையீடு செய்திருந்தது. இந்த நடவடிக்கைகளால் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் நீடித்து வருகிறது.
இந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான தூக்கு தண்டனை கைதி வினய் சர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால் அதனை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனை எதிர்த்து வினய் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வினய் சர்மாவின் உடல்நிலை குறித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாகவும் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கருணை மனுவை ஜனாதிபதி உரிய முறையில் ஆராயவில்லை என்பதை ஏற்க முடியாது. வினய் சர்மாவின் மருத்துவ அறிக்கை, கருணை மனுவுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளி நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் உள்ளார். இதனால், மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.