New Delhi: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரு வார கெடுவை டெல்லி நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த ஒருவாரத்திற்குள் அவர்கள் தங்களுக்குள்ள சட்ட உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தங்களுக்குள்ள சட்ட உரிமைகளை பயன்படுத்தி தாங்கள் தூக்கிலிடப்படுவதை காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனை எதிர்த்து மத்திய அரசும் டெல்லி அரசும் வழக்குத் தொடர்ந்திருந்தது.
டெல்லி நீதிமன்றம் தனது உத்தரவில், 'குற்றவாளி ஒருவரின் கருணை மனு நிலுவையில் இருக்கும்போது அவருடன் சேர்ந்த மற்ற குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றலாம் என்று டெல்லி சிறை விதிகள் கூறவில்லை.
குற்றவாளிகளின் நிலையை உச்ச நீதிமன்றம் ஒருமித்த முடிவாக தீர்ப்பு வழங்காத வரையில், குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. அனைவரும் ஒட்டுமொத்தமாகத்தான் தூக்கிலிடப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நிர்பயாவின் தாயார் கூறுகையில், 'குற்றவாளிகளுக்கு காலக்கெடு விதித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தண்டனையை குற்றவாளிகள் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தனர். இப்போது ஒருவாரத்திற்குள் எல்லாம் முடிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் சிங் ஆகியோருக்கு கடந்த 1-ம்தேதி தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான வினய் சர்மா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனுவை அனுப்பியுள்ளார். முன்னதாக அக்சய் சிங் தொடர்ந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.
தண்டனையை ஒத்தி வைப்பதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அவை அனைத்தையும் குற்றவாளிகள் செய்து வருவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறுகையில், 'குற்றவாளிகள் நாட்டின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற கால தாமதங்கள் நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கும். சட்ட உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்திய 2 குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்றார்.