மார்ச் 3-ம்தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படவுள்ளனர்.
New Delhi: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை மார்ச் மாதம் 3-ம்தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றும் தேதியை வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றத்தை நாடி அதிகாரிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்க வேண்டும் என்று டெல்லி அரசும், நிர்பயாவின் பெற்றோரும் வாக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில்தான் தற்போது தூக்கிலிடப்படும் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 22 தூக்கிலிடப்படும் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் குற்றவாளிகள் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளால் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னரும் குற்றவாளிகள் தங்களுக்குள்ள சட்ட உரிமைகளை பயன்படுத்தியால், மறு உத்தரவு வரும் வரையில் தூக்கிலிடுவதைக் கடந்த 31-ம் தேதி நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது
ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெத் வாரண்ட் பிறப்பித்தது டெல்லி விசாரணை நீதிமன்றம். ஆனால், இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனையை ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு தனித்தனியாகத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் டெல்லி அரசும் முறையீடு செய்திருந்தது. இந்த நடவடிக்கைகளால் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் நீடித்து வருகிறது.
இந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான தூக்குத் தண்டனை கைதி வினய் சர்மா குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார். ஆனால் அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனை எதிர்த்து வினய் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வினய் சர்மாவின் உடல்நிலை குறித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அவரது கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்ததாகவும் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கருணை மனுவை ஜனாதிபதி உரிய முறையில் ஆராயவில்லை என்பதை ஏற்க முடியாது. வினய் சர்மாவின் மருத்துவ அறிக்கை, கருணை மனுவுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளி நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் உள்ளார். இதனால், மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
,இந்த நிலையில் தற்போது குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி செவ்வாயன்று காலை 6 மணிக்குத் தூக்கிலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, குற்றவாளிகளுக்குச் சட்ட வாய்ப்புகள் இன்னும் உள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி அவர்கள், தண்டனை நிறைவேற்றும் காலத்தைத் தள்ளிப்போடுவார்களா அல்லது என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.