This Article is From Mar 02, 2020

நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது: டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Nirbhaya Case: குற்றவாளிகள் அக்‌ஷய் தாக்கூர், 31, பவண் குப்தா, 25, முகேஷ் சிங், 32 ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது: டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Nirbhaya Case: இன்று காலை, குற்றவாளிகளில் ஒருவரான பவண் குப்தா, தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

ஹைலைட்ஸ்

  • நாளை காலை தூக்கிலிடப்பட உள்ளார்கள் நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
  • குற்றவாளிகளுக்கு எதிரான தூக்குத் தண்டனை உத்தரவு பலமுறை தள்ளிப்போயுள்ளது
  • குற்றவாளிகள் நீதிமன்றங்களில் தொடர்ந்து தண்டனைக்கு எதிராக மனு
New Delhi:

நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகள், நாளை காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்பட இருக்கிறார்கள். இதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம், “நீதிமன்றத்தின் நேரத்தை அவர்கள் வீணடித்துள்ளார்கள். சட்ட நடைமுறையை அவர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். நாளை அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. 

குற்றவாளிகள் அக்‌ஷய் தாக்கூர், 31, பவண் குப்தா, 25, முகேஷ் சிங், 32 ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று காலை, குற்றவாளிகளில் ஒருவரான பவண் குப்தா, தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 23 வயதான நிர்பயா என்ற பெண்ணை, ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பவண் குப்தா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அரசு தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றங்களில் தண்டனைக்கு எதிராக மனுவைத் தாக்கல் செய்து வருகிறார்கள். நாளை அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்ற வாரம் பவண் குப்தா, தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். அவரின் மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பலாம். இதற்கு முன்னர் நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், வினய் குமார் ஷர்மா மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் ஜனாதிபதி கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்கள். அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாகக் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் மற்றும் வினய் ஷர்மா, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. அக்‌ஷய் குமார் கருணை மனு நிராகரிப்பு குறித்து எந்தவித முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்யவில்லை. 

2012, டிசம்பர் 16 ஆம் தேதி, மருத்துவ மாணவி நிர்பயாவை இந்த 4 பேர் மற்றும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தனர். இரும்புக் கம்பியை வைத்து அந்தப் பெண்ணை துன்புறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து அந்தப் பெண் சிங்கப்பூரிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி டிசம்பர் 29 ஆம் தேதி இறந்தார். 

குற்றவாளிகளில் ஒருவருக்கு 18 வயதுக்குக் கீழ் இருந்ததனால், சிறார் காப்பகத்தில் 3 ஆண்டுகள் இருந்துவிட்டு விடுதலையாகிவிட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராம் சிங், சிறையிலேயே தூக்கிட்ட நிலையில் இறந்தார். 

நிர்பயாவுக்கு ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சட்டங்களில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 

.