This Article is From Mar 06, 2020

நிர்பயா வழக்கு! குற்றவாளிகளைத் தூக்கிலிடும் புதிய தேதி அறிவிப்பு!!

மார்ச் 3-ம்தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பவன் குப்தாவின் கருணை மனுவைக் குறிப்பிட்டு, தூக்கிலிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நிர்பயா வழக்கு! குற்றவாளிகளைத் தூக்கிலிடும் புதிய தேதி அறிவிப்பு!!

ஹைலைட்ஸ்

  • சட்ட உரிமைகளால் தண்டனை நிறைவேற்றப்படுவது கால தாமதமாகி வருகிறது
  • இந்த முறையாவது தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
  • தண்டனை குறித்த புதிய உத்தரவை அறிவித்துள்ளது டெல்லி நீதிமன்றம்
New Delhi:

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 20-ம்தேதி காலை 5.30-க்கு அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர். ஏற்கனவே பலமுறை இவ்வாறு தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குற்றவாளிகள் தங்களுக்குள்ள சட்ட உரிமைகளைப் பயன்படுத்தி தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காலம் தாழ்த்தி வந்தனர்.

மார்ச் 3-ம்தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பவன் குப்தாவின் கருணை மனுவைக் குறிப்பிட்டு, தூக்கிலிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.


இந்த நிலையில் தற்போது புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக புதிய தேதியை அறிவிக்கும்படி திகார் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதனை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தங்களுக்கான அனைத்து சட்ட உரிமைகளையும் குற்றவாளிகள் பயன்படுத்தி விட்டதாகக் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் 20-ம்தேதி தூக்கிலிடப்படுவது உறுதி என்றே நம்பப்படுகிறது. 

நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறுகையில், 'மார்ச் 20-தான் குற்றவாளிகளுக்குக் கடைசி நாளாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

கடந்த செவ்வாயன்று காலை 6 மணிக்குக் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்படுவதாக இருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தூக்கிடுவதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. 

குற்றவாளிகளான அக்சய் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் தங்களது மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி புதிதாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவையும் நீதிமன்றம் திங்களன்று தள்ளுபடி செய்தது. 

தெற்கு டெல்லியில் 2012 டிசம்பர் 6-ம்தேதி 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா (அச்சமற்றவள்) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

பல்வேறுகட்ட சிகிச்சைகளுக்குப் பின்னர் அவர் சிங்கப்பூரின் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் டிசம்பர் 29-ம்தேதி அவரது உயிர் பிரிந்தது.

இந்த சம்பவத்தில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் குமார் சிங், பவன் குப்தா, ராம் சிங் மற்றும் சிறுவன் ஒருவன் என 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். 

இதில் முகேஷ், வினய், அக்சயின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துகொள்ளக் குற்றவாளியான சிறுவன் தனது தண்டனைக் காலத்தைச் சீர்திருத்தப் பள்ளியில் கழித்த பின்னர் விடுவிக்கப்பட்டான்.

இந்த நிலையில் பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் குற்றவாளிகளுக்கு மார்ச் 20 காலை 5.30-க்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

.