This Article is From Jan 31, 2020

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. இந்த சூழலில் டெல்லி நீதிமன்றம் தண்டனையை 2-வது முறையாக நிறுத்தி வைத்துள்ளது.

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம்
New Delhi:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை டெல்லி நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியுள்ளார். 

இந்த நிலையில் அடுத்த உத்தரவு வரும் வரையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சட்ட வாய்ப்புகளை பொறுத்தளவில் குற்றவாளி அக்சய் தாகூருக்குத்தான் அனைத்து விதமான வாய்ப்புகள் முடிந்துள்ளன. மற்ற 3 பேருக்கும் சட்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த நிலையில் மற்ற குற்றவாளிகளுக்கு சட்ட உரிமைகள் இருப்பதால் பிப்ரவரி 1-ம்தேதி தாங்கள் 4 பேரையும் தூக்கிலிடக்கூடாது என்று வலியுறுத்தி அக்சய் சிங் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 

நேற்று மற்றொரு குற்றவாளியான வினய் சர்மா குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், 'ஏற்கனவே சிறையில் பலமுறை வினய் சர்மா உயிரிழந்து விட்டார். இன்னும் ஏன் அவரை தூக்கிலிட வேண்டும்' என்று அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். 

முறைப்படி குற்றவாளிகள் 4 பேரும் ஜனவரி 22-ம்தேதி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளி முகேஷ் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவது பிப்ரவரி 1-ம்தேதிக்கு மாற்றப்பட்டது. 

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 

இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

.