வரும் வெள்ளியன்று காலை 5.30-க்கு குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- குற்றவாளிகளுக்கு இருக்கும் சட்ட உரிமைகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது
- குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்
- சிறையில் வைத்து குற்றவாளி ராம் சிங் அடித்துக்கொல்லப்பட்டதாக புகார்
New Delhi: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங் மனித உரிமைகள் ஆணையத்தை அணுகியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
மார்ச் 20-ம்தேதி நிறைவேற்றப்படவுள்ள தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுகியுள்ளோம். அடிப்படையில், சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ராம் சிங்குக்கு 70 வயதில் தாயாரும், 10 வயதில் மகனும் உள்ளனர்.
ராம் சிங் சிறையில் கொல்லப்பட்டார். இதனை நேரில் பார்த்த சாட்சி அவரது சகோதரர் முகேஷ் சிங் ஆவார். எனவே அவர்களைத் தூக்கிலிடக்கூடாது.
ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அவரை அடித்துக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தற்கொலை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராம்சிங்கின் மரணத்திற்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனை நேரில் பார்த்த சாட்சி முகேஷ் மட்டுமே. அவரை உடனடியாக தூக்கிலிட்டால் அது மனித உரிமை மீறலாகக் கருதப்படும்.
எனவே, வெள்ளியன்று நிறைவேற்றப்படவுள்ள தண்டனையை மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ராம் சிங்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகிய குற்றவாளி முகேஷ் சிங், தான் சம்பவ நடந்தபோது டெல்லியிலேயே இல்லை என்று கூறி மனுத்தாக்கல் செய்தார். இதன் மீதான தீர்ப்பை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், அக்சய் சிங் தாகூர், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் வெள்ளியன்று காலை 5.30-க்கு தூக்கிலிடப்படவுள்ளனர்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வைத்துக் கடந்த 2012, டிசம்பர் 16 அன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் பேருந்திலிருந்து தள்ளி விடப்பட்ட அவர், சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வெள்ளியன்று மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.